நீண்ட நேரம் உணவு வராததால் வீட்டிற்கு சென்ற தாய்-அக்கா... இறந்து கிடந்த தந்தை - மகள்... நடந்தது என்ன?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரஞ்சனி, சந்தியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சந்தியா அண்மையில் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனிடையே ரவி புதிதாக வீடு கட்டி வந்தார். அங்கு அவரது மனைவி செல்வி
மற்றும் பெரிய மகள் ரஞ்சனி வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இதனால் வீட்டில் இளைய மகள் சந்தியா மதிய உணவு சமைத்து தாயாருக்கும் அக்காவிற்கும் தந்தையிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதிய உணவிற்கு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் தாயார் செல்வியும், பெரிய மகள் ரஞ்சனியும் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்பொழுது சந்தியா இறந்து கிடந்த நிலையில் தந்தை ரவி தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் அழும் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து, ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்
இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சந்தியாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய
தடையம் இருந்த நிலையில், தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை மகளை கயிற்றால் இருக்கி கொலை செய்துவிட்டு அந்த அதிர்ச்சியில் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.