பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் - 6 பேர் மீது வழக்குப் பதிவு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பட்டியலின சிறுவர் ஒருவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்ற பொங்கல் திருவிழாவின்போது வேட்டியை மடித்துக் கட்டி சென்றதாகவும், வேட்டியை இறக்கி கட்டிக் கொண்டு செல்லுமாறு மாற்றுச் சமுகத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் இவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பிரச்னைகளின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் பயந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுவர் பொங்கலையொட்டி கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்கெவனே சிறுவனிடம் பிரச்னை செய்த அதே ஊரைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஸ், மணிமுத்து உள்ளிட்டோர் சிறுவனை கடத்தி சென்றதாகவும் பேசப்படுகிறது.
கண்மாய் பகுதியில் வைத்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் அந்த சிறுவனை தாக்கியதாகவும், மேலும், காலில் விழச் சொல்லி, அவர் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்தாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமைடைந்து சிறுவன் மயங்கி கிடந்தார். பின்பு சிறுவரின் பேற்றோர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமாரிடம் புகார் அளித்தும் 3 நாட்களாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது உறவினரான வழக்கறிஞரும், தீண்டமை ஒழிப்பு இயக்க நிர்வாகியுமான தெய்வம்மாள் முயற்சியில் கடத்தி சென்று சித்திரவதை செய்த 6 பேர் மீது எசிஎஸ்டி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.