”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” - ராமதாஸ்!
பாட்டாள் மக்கள் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ராமதாசும், அன்புமணியும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறனர். சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்.பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை இன்று கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள் மொழி, பொதுச் செயலர் முரளி சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என்பது உள்ளிட 37 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். அவர் பேசியது,
”இது காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. இது அல்லவா பொதுக்குழு. இந்த 36 தீர்மானங்கள் பாமகவிற்கான தீர்மானங்கள் மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி பேருக்கான தீர்மானங்கள். மக்களின் அனைத்து பிரச்சனைக் காகவும் நாம் போராடி உள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற 324 சமுதாயங்களுக்காக நான் பாடுபட்டு இருக்கிறேன். இன்னும் பாடுபடுவேன்.
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது வழங்கப்பட்ட 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்தது. என்னுடைய நண்பர் மறைந்த கலைஞர் அவர்கள் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார். அதன் மூலம் 115 சமூகங்கள் பயனடைந்து வருகின்றனர். பாமக எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுக்க எனக்கே அதிகாரம் கொடுத்து உள்ளீர்கள்.தொண்டர்களின் மனம் விரும்பும் நல்ல கூட்டணி நிச்சயம் அமையும்.நான் உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் சிறப்பாக செயல்படுவேன். உங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். மற்ற மாநிலங்களில் நடத்துவது போல தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும்” என்று பேசினார்.