ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி தோல்வியை சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிர்ணயிக்க உள்ளனா். வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்தோருக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியான முடிவின் படி வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.