"சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எம் எஸ் நகர் திட்டப்பகுதி, செட்டி தோட்டம் திட்ட பகுதி, மீனவர் குடியிருப்பு திட்ட பகுதி, கைலாசபுரம் திட்ட பகுதி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதிகாரிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னையில் பக்கிங்காம் கால்வாய், நதிக்கரையோரம் வசித்து வரக்கூடிய, அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் பெற்று பாதுகாப்பாக வாழ்ந்திட வேண்டும் என இந்த வாரியத்தை 1970 ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்தார்.
சென்னையில் லட்சக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1970 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் இன்று சிதிலமடைந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதை ஆய்வு செய்து சென்னையில் மட்டும் 31,000 சிதலமடைந்து வீடுகள் கண்டறியப்பட்டு படிப்படியாக அந்த வீடுகளை இடித்து விட்டு குடியிருப்பவர்களுக்கு அந்த வீடுகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் படிப்படியாக சிதிலம் அடைந்த வீடுகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் 13 திட்டப் பகுதிகள் 586 கோடி 94 லட்ச ரூபாய் மதிப்பில் 5150 வீடுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2014 இல் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை 2ஆயிரத்து 438 கோடி ரூபாய் மதிப்பில் 26ஆயிரத்து 668 குடியிருப்புகள் மட்டும் தான் கட்டப்பட்டது. இன்றைக்கு திமுக அரசு பொறுப்பேற்று நான்கு வருடங்களில் 5ஆயிரத்து 343 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 46 ஆயிரத்து 929 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 56 ஆயிரத்து 299 குடியிருப்புகளில் ஏழைகளை குடியேற்றி இருக்கிறோம். 152 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் 51 ஆயிரம் வீடுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
30 ஆயிரத்து 387 குடியிருப்புகள் பழுது பார்த்து புணரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 20ஆயிரத்து 613 குடியிருப்புகள் புனரமைக்கிற பணி நடைபெற்று வருகிறது. 2025- 26 ஆம் ஆண்டில் மட்டும் 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 137 திட்டப் பகுதிகளில் 76ஆயிரத்து 549 வீடுகள் பழுதுகள் நீக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் தொடர இருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கக்கூடிய மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லா வசதிகளும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இப்பேற்பட்ட நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக" தெரிவித்துள்ளார்.