5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த 5 மாநிலங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர்.
பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய தேசிய கட்சிகள் மற்றும் மிஜோரம் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என வாக்குப்பதிவுக்கு பின் பல்வேறு ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் நடத்திய கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்....
தெலங்கானா
ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் நடைபெற்ற 3-வது சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையானால் தெலங்கானா மாநில தேர்தல் முடிவு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி 2-வது இடத்திற்கும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த நிலையிலும் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று கணிப்புகள் கூறுகின்றன. 2014-ல் இருந்து முதலமைச்சராக இருக்கும் கே.சந்திரசேகர ராவ்வின் பதவி காலம் முடிவுக்கு வரும்.
- இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்புகளின்படி, 119 எம்எல்ஏக்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் 63 முதல் 79 இடங்களை வெல்லும்.
- அதே நேரத்தில் பிஆர்எஸ் 31 முதல் 47 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 48 முதல் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 40 முதல் 55 இடங்களிலும், பாஜக 7 முதல் 13 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று ஜான் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
- TV 9 பாரத்வர்ஷ்-போல்ஸ்ட்ராட் நிறுவனம், காங்கிரஸுக்கு 49 முதல் 59 இடங்களும், பிஆர்எஸ்-க்கு 48 முதல் 58 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் காங்கிரஸுக்கு 58 முதல் 68 இடங்களும், பிஆர்எஸுக்கு 46 முதல் 56 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளன. பெரும்பாலான கணிப்புகள் காங்கிரஸுக்கே சாதகம் என தெரிவிக்கின்றன.
மத்தியப்பிரதேசம்
230 எம்எல்ஏக்களைக் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவைக்கு, நவம்பர் 17-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, மத்தியப் பிரதேசம் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு, மத்தியப் பிரதேசத்தில் பாஜக 140 முதல் 162 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும். காங்கிரசுக்கு 60 முதல் 90 இடங்களே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.- இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு 140 முதல் 159 இடங்களும், காங்கிரஸுக்கு 70 முதல் 89 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டைம்ஸ் நவ்-இடிஜி பாஜகவுக்கு 105 முதல் 117 இடங்களையும், காங்கிரசுக்கு 109 முதல் 125 இடங்களையும் வழங்கியுள்ளது.
- ரிபப்ளிக் டிவி பாஜகவுக்கு 118 முதல் 130 இடங்களும், காங்கிரஸுக்கு 97 முதல் 107 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. "நாடு தொலைகாட்சிகளால் இயங்கவில்லை, தொலைநோக்குப் பார்வைகளால் இயங்குகிறது" என அக் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்கோ ஒருபடி மேலே சென்று, 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் போது ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, தற்போதைய கருத்துக்கணிப்பும் அதுபோல் தவறாகவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான்
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கருத்துக் கணிப்புகளின்படி, ராஜஸ்தான் மாநிலம், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டியாக இருக்கும் என தெரியவந்துள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், புதிய ஆட்சியை அமைப்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் கை மேலோங்கும்.
- இந்தியா டுடே- மை ஆக்சிஸ் கருத்துக்கணிப்பில், ராஜஸ்தானில் பாஜக 80 முதல் 100 இடங்களையும், காங்கிரஸ் 86 முதல் 106 இடங்களையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு காங்கிரஸுக்கு 94 முதல் 104 இடங்களும், பாஜகவுக்கு 80 முதல் 90 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டைம்ஸ் நவ்-ETG கருத்துக்கணிப்பு காங்கிரஸுக்கு 56 முதல் 72 இடங்களும், பாஜகவுக்கு 108 முதல் 128 இடங்களும் கிடைக்கும் என மிகப்பெரிய இடைவெளியை தெரிவித்துள்ளது.
- ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு, பாஜகவுக்கு 100 முதல் 122 இடங்களும், காங்கிரஸுக்கு 62 முதல் 85 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர்
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 40-50 இடங்களும், பாஜகவுக்கு 36-46 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரசுக்கு 41-53 இடங்களும், பாஜகவுக்கு 36-48 இடங்களும் கிடைக்கும் என ஏபிபி சி-வோட்டர் கணித்துள்ளது.
- ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 44-52 இடங்களும், பாஜக 34-42 இடங்களும்; காங்கிரஸுக்கு 46-56 இடங்களும், பாஜகவுக்கு 30-40 இடங்களும் கிடைக்கும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு கணித்துள்ளது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளில் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது 57 என்ற நம்பர் 75 ஆக மாறும் மாஜிக் நிகழும் என்றும் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.
மிசோரம்
40 தொகுதிகளை கொண்ட மிஜோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ், பாஜகவுக்கு முறையே 3வது மற்றும் 4வது இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
- இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்புகளின்படி ஜோரம் மக்கள் இயக்கம் 28 முதல் 35 இடங்களிலும், மிஜோ தேசிய முன்னணி 3 முதல் 7 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
- டைம்ஸ் நவ்-இடிஜி கருத்துக்கணிப்பு, ஜோரம் மக்கள் இயக்கம் 10-14 இடங்களிலும், மிஜோ தேசிய முன்னணி 14-18 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும், இரு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
- ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு மிஜோ தேசிய முன்னணிக்கு 10 முதல் 14 இடங்களும், ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு 15-25 இடங்களும் வழங்கியது.
- இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு மிஜோ தேசிய முன்னணிக்கு 14-18 இடங்களும், ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு 12-16 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஓரளவு முடிவுகளை ஒட்டியே வந்திருக்கின்றன என்றாலும், சில சமயம் அவை தோல்விகளையும் சந்தித்திருக்கின்றன. ஆனால், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது டிசம்பர் 3-ந் தேதி நண்பகலுக்குள் தெரிந்துவிடும்.