நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது!
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தலைமையாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற
நிறுவனம் பல மாவட்டத்தில் அலுவலகங்கள் அமைத்து செயல்பட்டது. தங்கள் நிதி
நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகவும், இரட்டிப்பு தொகை
தரப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.
இதை நம்பி பொதுமக்கள் 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் பலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை, அதன் தலைமை இயக்குனர்கள் மூவர் உள்ளிட்ட 30 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, அதன் 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தங்கம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, வங்கி கணக்குகளும் முடக்கப்படுள்ளன. இந்த மோசடி வழக்கில் தற்போது மேலும் 4 முக்கிய குற்றவாளிகளை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான டிரான்ஸ்கோ ப்ராப்பர்டீஸ் (Transco properties) என்ற நிறுவன இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா மற்றும் அஸ்ட்ரானியா ப்ராப்பர்டீஸ் (Astronio properties) என்ற நிறுவன இயக்குனர் ராஜ்குமார், சென்ட்ரியோ ப்ராப்பர்டீஸ் (Centrio properties) என்ற நிறுவன இயக்குனர் சஞ்சீவ் குமார் ஆகிய நால்வரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.