"2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல.." - நயினார் நாகேந்திரன் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக
கலையரங்கத்தில் பாஜக சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். இதில், பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம், பெண்களின் பிரதிநிதித்துவம், தெருமுனை கூட்டங்கள், சமூக ஊடக பரப்புரை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது,
"முருகர் பக்தர் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது. தமிழ்நாட்டில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 24 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது தம்பிக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் வேலை வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இடம் கொடுத்துள்ளனர்.
சென்னையில் போதைப்பொருள் சாதாரணமாக கிடைக்கிறது. திமுக
ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்டிஏ கோட்டைக்கு வரவேண்டும்.
செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய
கட்சியில் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை, எடுத்தவுடன் சொல்லுங்கள் என கூறுகின்றனர். வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு
கொண்டால் 'என்னை தெரியவில்லை' எனவே கூறுகிறார்.
கடலூரைச் சேர்ந்த பெண் நிர்வாகியை தொடர்பு கொண்ட நான் நயினார் நாகேந்திரன் என கூறிய போது, அவர் என்னை அவர்களுடைய நைனா என நினைத்து விட்டார் போல, என்னை ஒழுங்கா இருந்துக்கோ என கூறி போனை வைத்து விட்டார். கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேச வேண்டும். பாஜகவின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் கிடையாது. நமது ஒரே நோக்கம் 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதற்கான வேலைகளை உள்துறை அமைச்சர் பார்த்துக் கொள்வார்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.