#Madurai | 138 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத ஏ.வி. மேம்பாலம்... பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை!
மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏ.வி மேம்பாலம் 138 ஆண்டுகளை கடந்த நிலையில், இப்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரம் இயற்கையாகவே வடகரை, தென்கரை என இருப்பகுதிகளாக பிரிகிறது. முந்தைய காலத்தில் இந்த இரு பகுதிகளுக்கிடையே செல்வதற்கு மக்கள் பரிசல்களை பயன்படுத்தியுள்ளனர். அதனால் அன்றைய பிரிட்டிஷ் அரசால் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1884ஆம் ஆண்டு பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. பின்னர், 1886ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்கு ஏ.வி மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றுடன் 138 வது ஆண்டு நிறைவு செய்தும், ஏ.வி மேம்பாலம் மதுரை மாநகரின் போக்குவரத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. ஏ.வி மேம்பாலத்தின் 139 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வைகை நதி மக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்களால் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் ஏவி மேம்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.