நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு - குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் (எஸ்.ஐ) பணியாற்றிய இவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.
ரம்ஜான் நோன்பு இருந்த அவர் நேற்று (மார்ச் 18) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இடப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, ஜாகிர் உசேன் உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த பின்னர் உறவினர்கள் அவரின் உடலை வாங்க மறுத்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா ஆகிய இருவர் போலீசில் சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைத் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது டௌபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தி நெல்லை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெருமாள்புரம் காவநிலையம், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர் .