ஜாகிர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது!
திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர், டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி அதிகாலை பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியபோது அவரை 3 பேர் வெட்டிக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், தொட்டிப்பாலம் தெருவில் உள்ள ஒரு இடம் தொடர்பான பிரச்னையில் ஜாகீர் உசேன் பிஜிலியை அதேப் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில் இதுவரையிலும் கிருஷ்ணமூர்த்தி (எ) தவ்பிக், அவரது உறவினர்களான கார்த்திக், அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நூர்நிஷாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தௌபிக்(35) , அக்பர்ஷா(33), பீர் முகம்மது(37 ), கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.