மதுரையில் இளைஞர் வெட்டி படுகொலை... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்தி்நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் (27). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரின் சொந்த ஊர் மேலூர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேலூரில் இருந்து பெற்றோருடன் இப்பகுதிக்கு வந்து வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்த அபினேஷ் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்குவந்த சிலர் திடீரென அபினேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வார்த்தை மோதல் திடீரென கைகலப்பாக மாறியது.
அந்த கும்பல் அருகில் இருந்த ஓட்டை எடுத்து அபினேஷின் தலையில் தாக்கினர். இதில் காயமடைந்த அபினேஷ் வலியால் கத்தியவாறு சரிந்து கீழே விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபினேஷின் முகத்தில் சரமாறியாக வெட்டினர். மேலும், அந்த கும்பல் "இந்த கொலையை நாங்கதான் செஞ்சோம்னு எல்லோருக்கும் தெரியனும், எங்கள நெனச்சாலே எல்லோருக்கும் பயம் வரும்" என்று கூறியபடி அபினேஷே வெட்ட பயன்படுத்திய கத்தியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பியோடிதாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்தினர் அபினேஷை அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற மாட்டுத்தாவணி போலீசார் அபினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் கிடந்த அரிவாளை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றினர். உயிரிழந்த அபினேஷ் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.