பழ மார்க்கெட்டில் இளைஞர் வெட்டி படுகொலை - தப்பியோடிய மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!
மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி என்ற இளைஞர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பழ மார்க்கெட்டில் இருக்கும் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தங்கபாண்டி நேற்று இரவு வழக்கம்போல் பணிக்காக மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நீண்ட நேரமாக தங்கபாண்டியை தேடியுள்ளனர்.
இதையடுத்து மார்க்கெட் அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கபாண்டியிடம் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மர்ம கும்பலானது தங்கப்பாண்டியை சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் கீழே விழுந்த தங்கபாண்டியை கத்தியால் கழுத்தை அறுத்தபோது தங்கப்பாண்டி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் கொலையாளிகளை பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டி தப்பியோடியுள்ளனர்.
இதில் தங்கபாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி சென்றனர்.
மதுரையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பழ மார்க்கெட் பகுதியில் நடந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதற்கட்ட விசாரணையில், தங்கபாண்டிக்கும் கொலை செய்ய வந்த கும்பலுக்கும் இடையே முன் விரோதம் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.