புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளி கைது !
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அதிகாலையில் அப்பெண் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்த ஒருவர், விளக்குகள் அழைக்கப்பட்டுள்ள பேருந்தில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் 36 வயதான தத்தாத்ரேய ராமதாஸ் தான் என்றும் ஏற்கெனவே இவர் மீது திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது கடுமையான தண்டனை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், இச்சம்பவம் துயரமானது மட்டுமின்றி கோபத்தை ஏற்படுத்துகிறது. வெட்கித் தலைகுனிய வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையருக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் கடே ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த புனே குற்றப்பிரிவு போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.