'டிங் டாங் டிச்' விளையாடிய இளைஞர்கள்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவைச் சேர்ந்தவர் மைக்கேல் போஸ்வொர்த் ஜூனியர் (18). போஸ்வொர்த் இவர் மாசபோனாக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். அவர் கால்பந்து மற்றும் லாக்ரோஸ் விளையாடுவார். மேலும் மல்யுத்த அணியிலும் இவர் இருந்தார். இந்த சூழலில், இவரும் இவரது இரண்டு நண்பர்களும் அதிகாலை 3 மணியளவில் 'டிங் டாங் டிச்' என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
டிங் டாங் டிச் என்பது, ஒரு நபர் யாராவது ஒருவரின் வீட்டின் கதவை தட்டிவிட்டு அல்லது காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஓடிவிடுவார்கள். இந்த விளையாட்டை அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒருவரின் வீட்டின் கதவை தட்டினர். அப்போது, அந்த வீட்டின் உரிமையாளர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த மைக்கேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரின் நண்பர்களில் ஒருவர் காயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மைக்கேலின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுகுறித்து போலீசாரிடம் கூறுகையில், அந்த இளைஞர்கள் தன் வீட்டிற்குள் நுழைய முயன்றதாகவும், அதனால் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதில் காயமடைந்த இளைஞர், டிக் டாக் வீடியோவிற்காக அவருடைய வீட்டின் கதவை தட்டியதாக தெரிவித்தார். அவருடன் இருந்த மற்றொரு இளைஞர் 'டிங் டாங் டிச்' விளையாடிக்கொண்டிருந்தபோது இவ்வாறு நடந்ததாக தெரிவித்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய டைலர் சேஸ் பட்லரை (27) போலீசார் கைது செய்தனர். இளைஞர் வேறு வேறு பதில்களை கூறுவது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.