காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள ராஜசுடாமணி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சுப்பிரமணியம் (51). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன வயலுக்கு உரம் போடுவதற்கு சென்றுள்ளார்.
அப்போது திடிரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அதேநேரம் வயல் வெளியில் உரம் போட்டுக்கொண்டு இருந்த சுப்பிரமணியம் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சுப்பிரமணியம் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுப்பிரமணியனை தேடி இன்று காலை வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது சுப்பிரமணியம் உடல் கருகி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது உறவினர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.