வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி மகேஷ்(29), கண்ட்லா அனில் குமார்(27), அய்யோரி மோகன்(21) ஆகிய 4 பேருக்கும் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கணினி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் பணம் பெற்றுள்ளார்.
கடந்த செப். 30 ஆம் தேதி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், சீன பணமோசடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்களில் ஈடுபட காட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வார கால போராட்டத்திற்குப் பின்னர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் அக்.7 ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் பணம் தர மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஜக்தியால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்தனர். ‘அந்த நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் பெண்களின் பெயரில் போலிக் கணக்குளை உருவாக்கி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் பேசி, அவர்களை நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்க எங்களை பயன்படுத்தினர். இதன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்குகள், காப்பீட்டு விவரங்கள், பங்குகள் பற்றி தெரிந்துகொண்டு, பின்னர் அவர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை எடுத்துவிடுகின்றனர்’ என்று இளைஞர்கள் கூறினர்.
டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்ததாக அனில் குமார் கூறியுள்ளார். மாற்றுத் திறனாளியான அய்யோரி மோகன், 'எனக்கு பிட்காயின் விற்பனையுடன் தொடர்புடைய வேலை என்று கூறி அழைத்துச் சென்றனர். முதலில் என்னுடைய தட்டச்சு வேகத்தைப் பார்த்து என்னை நிராகரித்தனர். பின்னர் என்னை வேலையில் ஏற்றுக்கொண்ட நிலையில், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வைத்தனர். அவ்வாறு செய்யவில்லை என்றால் அபராதம் விதித்தனர், சில நேரங்களில் அடிக்கவும் செய்தனர். தனிப்பட்ட செல்போனைக் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை, நிறுவனம் வழங்கிய செல்போனில் மட்டுமே பேசமுடியும்' என்றார்.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட, போலி அடையாள அட்டைகளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உணவு, இருப்பிடம் இன்றி வேலை வாங்கியதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இளைஞர்கள் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சட்டைப்பையில் தனது செல்போனை மறைத்து வைத்து, அந்த நிறுவனங்களில் காவல்துறை சோதனை செய்ததை ரகசியமாக பதிவு செய்ததாக தெலங்கானா போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் மட்டுமின்றி இந்தியாவில் பல இளைஞர்கள் இதுபோன்ற சூழல்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர் இதுகுறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.