For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“முனைவர் பட்டம் பெற்ற கால்டுவெல்லை 10-வது கூட படிக்காதவர் என்பதா?” - ஆளுநருக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்!

01:38 PM Mar 11, 2024 IST | Jeni
“முனைவர் பட்டம் பெற்ற கால்டுவெல்லை 10 வது கூட படிக்காதவர் என்பதா ”   ஆளுநருக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்
Advertisement

கால்டுவெல் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கால்டுவெல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால பிரஜாபதி அடிகளார், திருநெல்வேலி திருமண்டல சிஎஸ்ஐ பேராயர் பர்ணபாஸ், மௌரிய புத்தர் ஆகியோர் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பேராயர் பர்ணபாஸ்,  “கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் கால்டுவெல்.  அவர் தங்கி இருந்த கொடைக்கானல் பங்களாவில் பத்திரமாக அவர் பெற்ற பட்டங்கள்,  சான்றிதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.  உலகிற்கு தமிழ் மொழி சிறந்தது என்று கூறியவர் கால்டுவெல்.  தமிழ்மொழி குறித்து ஒப்பிலக்கணம் எழுதியவர் அவர்.

எல்லாவற்றையும் கற்று தேர்ந்த கல்விமான் கால்டுவெல் குறித்து ஆளுநர் குறைகூறியது வருத்தத்தை அளிக்கிறது. இது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது. அவர் எழுதிய ஒப்பிலக்கணத்திற்காக விக்டோரியா மகாராணியால் 1856-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. உயர்ந்த மனிதரிடமிருந்து தரக்குறைவான வார்த்தையை கேட்பது வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து பால பிரஜாபதி அடிகளார் கூறியதாவது :

“தமிழை அழிக்க வேண்டும், தமிழ் வளர்ச்சியை தடுக்க வேண்டும், தமிழுக்காக யாரெல்லாம் போராடினார்களோ அவர்களை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்.  அய்யா வைகுண்டர், சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடிவர்.  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் அய்யா வைகுண்டர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாறு தெரியாமல் வரலாறு படைக்கக்கூடாது.  கால்டுவெலின் கல்வி குறித்த ஆளுநர் பேசிய நிலையில்,  இன்று அவர் பெற்ற பட்டங்கள் பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது.  இதற்கு ஆளுநர் என்ன பதில் சொல்லப்போகிறார்? சனாதன கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பது தான் அய்யா வழி. தமிழை வளர்ப்பதற்காக கேரளத்திலிருந்து பிரிந்து தமிழ்நாட்டோடு இணைந்தவர்கள் அய்யா வழி மக்கள்.

இப்படியான வரலாறு தெரியாமல் ஆளுநர் பேசுகிறார்.  ஆரியத்தை திணிப்பதற்காகவும் இந்தியை திணிப்பதற்காகவும் அவர் செயலாற்றுகிறார்.  அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.  இப்படி ஒரு ஆளுநர் எங்களுக்கு தேவை இல்லை.  இப்படி பேசும் ஆளுநர் பதவியை எடுத்துவிட வேண்டும். அரசர்கள் காலத்தில் தான் அடக்குமுறையை வன்கொடுமையை சந்தித்தோம்.  எங்களது தாய்மொழி தமிழ்.  இந்தி எங்களுக்கு வேண்டாம்.  ஆளுநருக்கு எதிராக எந்த மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.  ஆளுநரும் வெளியிலிருந்து வந்தவர் தான்.  அவரது மொழியும் நம்முடைய மொழியும் ஒன்றல்ல. இந்துக்களுக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார்.

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் பேசிய நிலையில்,  நன்கு அறிந்த தமிழிசை சௌந்தரராஜன்,  சி.பி.ராதாகிருஷ்ணன்,  நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆளுநரின் கருத்திற்கு பதில் அளித்திருக்க வேண்டும்.  குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்கவில்லை.  அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் பேசியும், தமிழ்நாடு அரசு இதுவரை வாய் திறக்காதது தவறுதான்”

இவ்வாறு பால பிரஜாபதி அடிகளார் தெரிவித்தார்.

Tags :
Advertisement