"தவறான கொள்கைகள் பொருளாதாரத்தை முடக்கிவிடும்" - #RahulGandhi பதிவு!
பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இந்த நாளன்று பாஜகவை எதிர்க்கட்சிகள் விமரிசித்து வருகின்றன. இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
“பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா இன்று அதிக பணத்தைப் பயன்படுத்துகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழித்து பணமதிப்பிழப்பு ஏகபோகங்களுக்கு வழி வகுத்தது. வணிகங்களுக்கு அச்சம் தரும் சூழலை உருவாக்கும் திறமையற்ற, தவறான நோக்கங்களைக் கொண்ட கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கிவிடும். நாடு முழுவதும் உள்ள வணிகங்களை மேம்படுத்த, சுதந்திரம் மற்றும் முறையான விதிமுறைகளுடன் கூடிய புதிய ஒப்பந்தம் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.