WPL 2025 - தொடர்ந்து 2வது வெற்றியைப் பதிவு செய்த ஆர்சிபி!
நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், 22 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 141 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், சாரா பிரைஸ் 23 ரன்களும் எடுத்தனர். ஆர்சிபி தரப்பில் ரேணுகா சிங் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆர்சிபி, 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிப் பெற்றது.பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 81 ரன்களும், டேனி வயட்-ஹாட்ஜ் 42 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகி விருதை ரேணுகா சிங் பெற்றார்.
பெங்களூரு அணி தொடர்ந்து தனது 2வது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.