உலக முதலீட்டாளர் மாநாடு - குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி குஜராத் GIFT City-ல் மட்டும் மதுவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கடந்த 1960 மே 1ம் தேதி உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் மதுபானங்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் நுகர்வு போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் 10 நாட்களுக்கு உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்காக குஜராத் காந்தி நகரில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (GIFT City) என்கிற வளாகம் உருவாக்கப் பட்டுள்ளது. உலக வர்த்தக சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வளாகத்திற்கு மது விலக்குக் கொள்கையிலிருந்து விலக்கு அளிப்பதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் முழுவதும் மதுவிற்கு தடை நடைமுறையில் அமலில் இருக்கும் அதேவேளையில் இந்தப் பகுதிக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. கடந்த காலத்தில் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற விலக்கு அளிக்கப்படவில்லை என அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விலக்கு குஜராத் உச்சிமாநாடு தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ளது.
"கிஃப்ட் சிட்டி உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்துள்ளது. உலக முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு உலகளாவிய வணிக சூழலை வழங்குவதற்காக கிஃப்ட் சிட்டி பகுதியில் 'ஒயின் மற்றும் உணவு' வசதிகளை அனுமதிக்க தடை விதிகளை மாற்ற வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின்படி, கிஃப்ட் சிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளுக்கு மது மற்றும் உணவு வசதிகளுக்கான அனுமதி வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.