"நாசமான நெல்மணிகளுக்கு காரணம் இயற்கை அல்ல, திமுகவின் ஊழல் மட்டுமே" - தவெக தலைவர் விஜய்!
தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களின் வயல்வெளிகள் தண்ணீர் தேங்கி பாழானது, நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்ப முடியாமல் வீணானது, முறையான கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் நெல் மூட்டைகளில் பயிர் முளைத்தது என டெல்டா விவசாயிகளின் கண்ணீரில் மிதக்கிறது தமிழ்நாடு.
நிர்வாகத் திறனும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் இல்லாத மக்கள் விரோத திமுக அரசின் கையாலாகாத தனமே இதற்கெல்லாம் காரணம் என்று நாம் விமர்சித்து வந்தோம். இந்நிலையில், விவசாயிகளின் வாழ்வை இப்படி நெருக்கடியில் தள்ளியதற்கு வெறுமனே மழையோ, நிர்வாக அலட்சியமோ காரணம் அல்ல. அதையும் தாண்டி, அடிப்படை ஆதாரமான நெல் கொள்முதலிலும் ஊழல் செய்த திமுக அரசே எல்லாவற்றுக்கும் காரணம் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய பணிக்கு மூன்று தனியார் நிறுவனங்களுடன் இந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். அந்த மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு சொன்ன விதியை மீறி, தமக்குக் கீழ் 19 போக்குவரத்து கம்பெணிகளிடம் துணை ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதில் விஷயம் என்னவெனில்,
1. அரசு பொறுப்புதாரராக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் விதியை மீறி தமது பணியைச் செய்யவில்லை
2. அரசு குறிப்பிட்ட தேவையான லாரிகளை கொள்முதலுக்கு அவர்களால் அனுப்ப முடியவில்லை
3. ஒரு டன் மூட்டைக்கு அரசு நிர்ணயித்த ரூ.598 என்ற தொகையைக் கொடுக்காமல், லாரி உரிமையாளர்களுக்கு டன்னுக்கு ரூ.186 என்ற சொற்ப தொகையைக் கொடுத்துள்ளனர்.
4.போதிய வாகனங்கள், உரிய விலை போன்றவற்றைப் போக்குவரத்தில் செயல்படுத்தாததால் 48 மணிநேரத்தில் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய நெல்மணிகள், 40 நாட்கள் கைவிடப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியிருக்கின்றன.
5. இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட 40 லட்சம் டன் நெல் மூட்டைகளைக் கணக்கிட்டால், இந்த போக்குவரத்து முறைகேட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ஊழல் நடந்துள்ளது.
இந்த ஒப்பந்ததாரர்கள் மீது இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன? எளிய விவசாயிகளிடம் இருந்து, அடிப்படை ஆதாரமான இவற்றிலேயே இவ்வளவு ஊழல் நடத்திருப்பதில் திமுக அரசின் பங்கு என்ன?விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்கள் வாழ்வாதாரத்தையே சீரழித்த இந்த திமுக அரசின் ஊழல் வெறிக்கு விவசாயிகளும் மக்களும் 'உரிய விலை' கொடுக்கப் போகும் நாளை பார்க்கத்தான் போகிறீர்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.