இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி - வங்கதேச அணி வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக சரித் அசலங்கா நிதானமாக விளையாடி, 105 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வங்கதேச அணி சார்பில் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் ஓவரிலேயே ஒரு சிக்சர் உட்பட 10 ரன்களை சேர்த்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தன்ஜித் ஹாசன், மதுஷங்கா பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லிட்டன் தாஸ், 23 ரன்கள் சேர்த்து மதுஷங்கா பந்துவீச்சில் அவரும் ஆட்டமிழந்தார். 17.1 ஓவர் முடிவில் 100 ரன்களை தொட்டது வங்கதேசம்.
ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்களும் எடுத்தநிலையில் அவர்களை சதம் அடிக்க விடாமல் தடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார் ஏஞ்சலோ மேத்யூஸ். 35 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முகதுல்லா 22 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
முஷ்ஃபிகுர் ரகிம் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத்தொடர்ந்து மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 41.1 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி இந்த தோல்வியின் மூலம் 8 போட்டிகளில் 6 தோல்விகளுடன் 8 ஆவது இடத்திற்கு பின் தங்கியது