மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிய வழக்கு - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு..!
மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துனர். இதனை அடுத்து 10 மணி நேரத்திற்கு மேலாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்ற நிலையில், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்கள் ; “பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், இடஒதுக்கீடு சட்டத்தை வருகின்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன.23) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த மனுவுக்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, விரிவாக பதிலளிக்க 2 வார கால அவகாசம் கோரினார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.