மகளிர் ஒருநாள் கிரிக்கெட் | மே.இ.தீவுகளை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்ற இந்தியா... ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய மகளிரணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கிந்திய அணிகள், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 103 ரன்களிலே சுருண்டனர். 26.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் இதன்மூலம் ஒரே ஆண்டில் 1,600 ரன்களை கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார்.