For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!

11:50 AM Mar 08, 2024 IST | Jeni
மகளிர் தினம்   76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்
Advertisement

மகளிர் தினத்தை முன்னிட்டு 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள் அளிக்கும் பங்களிப்பை கெளரவப்படுத்தும் விதமாக ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், சம உரிமை, சம ஊதியம், சம வாய்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு,  அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம்,  விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்றும், பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர், அதனை நாம்தான் தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, “இது நீங்கள் உயரே பறப்பதற்கான நேரம், நீங்கள் இந்த நாட்டின் மகள்கள்” என்று தனது X தள பக்கத்தில் பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய பயணம் தொடரும் என்ற உறுதியுடன் பெண்கள் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்நிலையில், அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
Advertisement