பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது - விஜயதரணி விளக்கம்!
பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும், நாட்டின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் தன்னாலான அனைத்து பணிகளை செய்வதாகவும் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. இதனைத்தொடர்ந்து, விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது வேறு ஒரு தேசிய கட்சியில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் செயல்பாடு, திட்டங்களால் இந்த கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. அவரோடு இணைந்து பாஜகவை தமிழ்நாட்டில் வலுப்பெற வைப்போம்.
நாட்டுக்கு பெண் தலைவர்கள் அதிக அளவில் தேவை. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே நாட்டின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் என்னாலான அனைத்து பணிகளையும் செய்வேன். காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருக்கிறது. அதன் காரணமான அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறினேன்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் என்னுடைய பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுபோன்று பல ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த அதிருப்தியே அக்கட்சியை விட்டு வெளியேற காரணம்” என தெரிவித்தார்.