இறந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்... 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!
மத்திய பிரதேசத்தின் மந்த்சௌர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய் (35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில், மந்த்சௌர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள காந்தி சாகரில் இருந்து காணாமல் போனதாக தெரிகிறது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடினர்.
சில நாட்களுக்குப் பிறகு, மும்பை - டெல்லி நெடுஞ்சாலையில் (மந்த்சௌரிலிருந்து 150 கி.மீ) ஜபுவா மாவட்டத்தின் தாண்ட்லாவில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கையில் குத்தி இருந்த பச்சை (Tattoo) மற்றும் காலில் கட்டியிருந்த கயிறு ஆகியவற்றை பார்த்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல் போன் லலிதா பாய்தான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார் குற்றவாளிகளை தேடினர்.
பன்புராவைச் சேர்ந்த ஷாருக்கான் என்பவருடன் தான் லலிதா பாய் கடைசியாக சென்றதாக அவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, ஷாருக்கான், இம்ரான், சோனு மற்றும் எஜாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் குற்றவாளிகள் என்பதற்காக போதிய ஆதாரம் போலீசாரிடம் இருந்ததை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, லலிதா பாய் என்று நினைத்த உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்தனர். இந்த நிலையில்தான், லலிதா பாயின் குடும்பத்தினரும், போலீசாரும் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, இறந்ததாக நினைத்த லலிதா பாய் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மந்த்சௌரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். லலிதா பாயை பார்த்த அவரது குடும்பத்தினர் இறந்ததாக நினைத்தவர் உயிருடன் வந்ததை நினைத்து ஆச்சரியமடைந்தனர். இருப்பினும் ஒரு பக்கம் அவர் திரும்பி வந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தனர். பின்னர், அவரது குடும்பத்தினர் உடனடியாக லலிதா பாயின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவரது அடையாளத்தை நிரூபிக்க பிற ஆவணங்களுடன் காந்தி சாகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
காந்தி சாகர் காவல் நிலைய பொறுப்பாளர் தருணா பரத்வாஜ், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தப் பெண் சில நாட்களுக்கு முன்பு தங்களைத் தொடர்புகொண்டு, அவர் உயிருடன் இருப்பதாகக் கூறியதை உறுதிப்படுத்தினார். கிராமவாசிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் லலிதா பாயின் அடையாளத்தை மறுபரிசீலனை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து லலிதா பாய் கூறுகையில், ஷாருக்கானுடன் பன்புராவுக்கு விருப்பத்துடன் சென்றதாகவும், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தன்னை ஷாருக் என்ற மற்றொரு நபருக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும் தெரிவித்தார். கோட்டாவில் அந்த நபருடன் 18 மாதங்கள் வசித்து வந்த அவர், அங்கிருத்து தப்பிக்க சரியான நேரத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய அவர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் திரும்ப வந்ததாக தெரிவித்தார். தன்னிடம் தொலைபேசி இல்லாத காரணத்தினால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
லலிதா பாயின் தந்தை பேசுகையில், "எங்கள் மகளை காணவில்லை. போலீசார் காட்டிய பெண்ணின் உடல் எங்கள் மகள்தான் என நினைத்தோர். அவர் உயிருடன் இருப்பதாகவும், திரும்பி வருவார் என்றும் நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை" என்றார். இதற்கிடையே, தகனம் செய்யப்பட்ட பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர். மேலும், கொலை குற்றவாளிகளாக சிறையில் உள்ள நபர்கள் குறித்தும் அதிகாரிகளிம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.