“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” - ஆட்டின் தலையுடன் காவல் நிலையம் சென்ற பெண்... நீதி கேட்டு போராட்டம்!
நாகப்பட்டினம் அடுத்த வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 31). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது ஆடு ஒன்று காணாமல் போனதால் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் தனது ஆடு திருடு போனதை அறிந்த அவர், அதனை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்று எண்ணினார்.
கத்திரிக்காய் முற்றினால், சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதை அறிந்த
அவர், தனது ஆடு எப்படியும் கசாப்பு கடையில்தான் இருக்கும் என்பதை தெரிந்து
கொண்டார். தொடர்ந்து வடக்கு பெரிய நல்லூர், தெற்கு பூஜை நல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கறிக்கடைகளில் தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் கல்லார் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் தனது ஆடு வெட்டப்பட்டு தலை தனியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து கறிக் கடைக்காரரான சையது அகமதுவிடம் இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனது ஆட்டின் தலையையும், உடலையும் பூங்கொடி கேட்டுள்ளார். அதனை தர மறுத்த சையது அகமது, பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ஆட்டின் தலையை எடுத்துக்கொண்டு பூங்கொடி அங்கிருந்து நாகை நகர காவல் நிலையத்துக்கு நீதி கேட்டு சென்றுள்ளார். கையில் ஆட்டின் தலையுடன் பெண் வருவதை பார்த்த போலீசார் ஒரு கனம் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் நாகை போலீசார் வழக்குப்பதிவு
செய்து கறிக்கடை உரிமையாளர் சையது அகமதுவை கைது செய்தனர்.
அடையாளம் காட்டுவதற்காக வெட்டப்பட்ட ஆட்டின் தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண்ணால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.