சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்த முயற்சி... வசமாக சிக்கிய பெண்!
பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதைனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் அவரது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அதில் அவர் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 100 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் 1,096 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடியே 96 லட்சம் ஆகும்.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.