For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்" - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

திமுகவின் ரூ.1,020 கோடி டெண்டர் ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
03:15 PM Dec 08, 2025 IST | Web Editor
திமுகவின் ரூ.1,020 கோடி டெண்டர் ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்    அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒப்பந்தங்களை வழங்கியதில் ரூ.1,020 கோடி அளவுக்கு கையூட்டு மற்றும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு அனுப்பியுள்ள அமலாக்கத்துறை, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதே துறையில் வேலைவாய்ப்பு வழங்கியதில் ரூ.888 கோடிக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியிருக்கும் நிலையில், இப்போது மேலும் ரூ.1,020 கோடி கையூட்டு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழலுக்கான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் எவ்வாறு சிக்கினவோ, அதேபோல் தான் இந்த ஊழலுக்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. டெண்டர் ஊழலுக்கான தொகைகள் எவ்வாறு பெறப்பட்டன? அவை ஹவாலா முறையில் எவ்வாறு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டன? என்பது குறித்த ஆதாரங்கள், புகைப்பட சான்றுகள், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்கள் அடங்கிய 252 பக்க ஆவணத்தையும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் அமலாக்கத்துறை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்பாகவே அந்த ஒப்பந்தம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது ஆட்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டதாகவும், யார் கையூட்டு கொடுத்தார்களோ, அவர்கள் மட்டுமே ஒப்பந்தம் பெறும் வகையில் ஒப்பந்தப்புள்ளி விதிகள் திரிக்கப்பட்டதாகவும் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கப்பதாக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமூக கழிப்பறைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல், நபார்டு வங்கி நிதியுதவியில் நடைபெறும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் வாயிலாக மட்டும் இந்த ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கையூட்டாகவும், திமுக கட்சி நிதியாகவும் இந்த ரூ.1,020 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. திமுக எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கும் கட்சி என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அரசுத்துறைகளின் ஒப்பந்தங்களை வழங்கும் போது, விதிகள் தான் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் ஊழல் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி தான் பின்பற்றப்பட்டிருக்கிறது. விதிகள் என்ன சொன்னாலும் கவலையில்லை, யார் அதிக கையூட்டு தருகிறார்களோ, அவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பதை கொள்கையாக திமுக அரசு கடைபிடித்து வருகிறது. ஊழல் செய்வதற்கு ஏற்ற வகையில் திமுகவினர் விதிகளை வகுத்திருக்கிறார்கள் எனும் போது, திமுகவினர் ஆட்சி செய்வதே ஊழல் செய்வதற்காகவும், அதற்கு வசதியாக விதிகளை வகுப்பதற்காகவும் தான் என்பது அம்பலமாகிறது.

அண்மையில் சென்னையில் இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் நூறு நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குப்பை அள்ளும் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட திமுக அரசு, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அவர்களின் போராட்டத்தை சிதைத்தது. அப்போதே ரூ.2300 கோடி குப்பை அள்ளும் ஒப்பந்தந்ததை பாதுகாக்கவும், அதற்காக தங்களுக்கு கிடைத்த வெகுமதிக்கு நன்றிக் கடன் செலுத்தவும் தான் தூய்மைப் பணியாளர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தேன்.

இத்தகைய குப்பை அள்ளும் ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்குவதற்காகவும் கையூட்டு பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குப்பை அள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு, கூலிப்படையை போன்று தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குகிறது என்றால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு யாருக்கான அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

ரூ.1,020 கோடி டெண்டர் ஊழல் என்பது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக பெறப்பட்ட கையூட்டின் சிறு பகுதி தான். உண்மையில் இந்தத் துறையில் நடைபெற்ற ஊழலின் மதிப்பு மட்டும் இன்னும் பல மடங்கு இருக்கும். திமுக அரசின் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற மொத்த ஊழல்களின் மதிப்பைக் கணக்கிட்டால், அது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடனையும் அடைப்பதற்கு தேவையான நிதியை விட கூடுதலாக இருக்கும் என்பதே உண்மை.

திமுக ஆட்சியில் கடந்த காலங்களில் நடந்த ரூ.4,730 கோடி மணல் கொள்ளை ஊழல், ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் ஆகியவை குறித்த ஆதாரங்களை அமலாக்கத்துறை அனுப்பியும், அதன் மீது வழக்கு தொடர திமுக ஆட்சியாளர்கள் அஞ்சி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்திருக்கும் ரூ.1,020 கோடி டெண்டர் ஊழலையும் அதேபோல் கிடப்பில் போட்டுவிடக் கூடாது. இந்த ஊழல் குறித்தும், ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்ட இரு ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல்களில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement