தவெக-வை கூட்டணிக்கு அழைப்பீர்களா? - இபிஎஸ் பதில்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்'
என்ற பிரச்சாரப் பாடல் வெளீயிடப்பட்டது. அதன் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"மக்களிடம் செல் , அவர்களுடன் வாழ் , அவர்களிடம் கற்றுக்கொள், அவர்களை நேசி என்றார் அண்ணா. அண்ணா வழியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மக்களுக்காக உழைத்தனர். அவர்கள் காட்டிய வழியில் அதிமுக இயங்கி வருகிறது. மக்களை இப்போதுதான் நான் சந்திப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். என்னை கூறுவதாக நினைத்து அவரை அவரே கூறி உள்ளார். நான் எப்போதும் இயல்பாக மக்களோடு இருப்பவன். மக்களை சந்தித்து பேசியபடியே
இருக்கிறேன். மக்களின் குரலாக அதிமுகவும் நானும் ஒலித்து வருகிறோம்.
இந்த எழுச்சி பயணம் முக்கியமான அத்தியாயமாக இருக்கும். எனது
பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியின் கொடுமையை அம்பலப்படுத்தி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதே. இந்த ஆட்சியில் சிறுமி முதல் வயதானோர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்த இயக்கம் அதிமுக. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஏற்றம் கண்டது. மிகப்பெரும் மாற்றத்தை சுற்றுப் பயணம் ஏற்படுத்தும். 2026 தேர்தலில் அதிமுக வென்று வரலாறு படைப்போம்.
வரும் 7 ம் தேதி கோவையில் இருந்து சுற்றுபயணத்தை தொடங்குகிறேன்.
234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். 2026 ல் பெரும்பான்மை இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூற உள்ளோம். பொய்யை
மூலதனமாக வைத்து திமுக ஆட்சி நடக்கிறது. அந்தந்த மாவட்ட பிரச்னையை முன்னிருத்தி அந்தெந்த மாவட்டங்களுக்கு செல்லும் போது பேச உள்ளோம்.
தேமுதிக ஜனவரியில்தான் தங்களது கூட்டணி அறிவிப்பை வெளியிட உள்ளதாக
கூறியுள்ளனர். எல்லா கட்சிகளும் தங்களை வளர்த்துக் கொள்ள விமர்சிப்பது இயல்புதான். அந்த வகையில் விஜயும் அதிமுகவை விமர்சித்துள்ளார்" என்றார்.
உங்கள் கூட்டணியில் இணைய தவெக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற
கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுகவை எதிர்க்கும் அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுகவை அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்களுடன் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி. அவர்களும் இதற்கு
ஒத்துழைப்பு வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே உள்ள அடிப்படையில் தான் Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் உடன் நான் எதும் கேட்கவில்லை. ஏற்கனவே எனது இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையின்போது கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டார். அதிமுக தலைமையில் கூட்டணி என்றும், அதிமுக தலைமையில் ஆட்சி, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அமித்ஷா கூறிவிட்டார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அந்த வழக்கை விசாரிக்க தனி நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். நான் சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரத்திற்கு செல்லும் போது அஜித்குமாரின் தாயாரை சந்திப்பேன். அதிகாரத்தில் இருப்போர் கூறியதாலேயே அந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் யார் என்பதை சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். எங்குபார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், போதை பொருள் விற்பனை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது.
எங்கள் கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்.
தேர்தல் வாக்குறுதி உயிர் போன்றது. அதை நாங்கள் தேர்தல் அறிவிப்பின் பிறகு
வெளியிடுவோம். வீடு வீடாக சென்று கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கும் அளவிற்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பரிதாபமாகிவிட்டது. எல்லா கட்சிகளிலும் மக்கள் விருப்பத்தோடு கட்சியில் இணைவார்கள். ஆனால் திமுக வீடு வீடாக சென்று கட்சியில் இணைந்து கொள்ளுங்கள் என உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலைக்கு சென்று விட்டது. அதிமுக பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைத்த பிறகு மு.க.ஸ்டாலின் எனது வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.