உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மாநாடு தொடங்கும் முன்னரே பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மாநாட்டு திடலில் புதிதாக 40 அடி உயர கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் இந்த மாநாட்டை தொடங்கி வைக்கும் விதமாக இந்தக் கொடி கம்பத்தில் தவெக கொடியை ஏற்றி வைக்கிறார்.
முன்னதாக, மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்தக் கொடி கம்பம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் தொண்டர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, தற்போது 40 அடி உயர புதிய கொடி கம்பம் நிறுவப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், மாநாடு குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.