“பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது” - டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சனம்!
பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
“10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார். இன்று அதன் புள்ளி விவரங்களை கூட இந்த அறிக்கையில் கொடுக்க, அவர்கள் தயாராக இல்லை. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் மிக அதிகமாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி, 10 ஆண்டுகளில் பணவீக்கம் 70% அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். இன்று அக்கட்சியின் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதற்கான எதுவும் இல்லை.
மிக முக்கியமாக வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளை, பிரதமர் இன்று வரை சந்திக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்ற விவசாயிகளை, கடுமையான தடுப்புகள் அமைத்து தடுத்தனர். 10 ஆண்டுகளில் பாஜக தன் அறிக்கைகளால் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. இன்று நாட்டின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மக்கள் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.300-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்தது. பெட்ரோல் விலை ரூ. 75-லிருந்து ரூ. 100-ஐ எட்டியது. டீசல் விலை ரூ. 55-ல் இருந்து ரூ. 90-ஐ எட்டியது. குழந்தைகளுக்கு போதிய அரசு பள்ளிகள் இல்லை. குடிமக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மொத்த செலவு, டெல்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவாக உள்ளது.”
இவ்வாறு டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.