For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா? - என்.சி.பி. அதிகாரி விளக்கம்!

03:18 PM Mar 09, 2024 IST | Jeni
ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா    என் சி பி  அதிகாரி விளக்கம்
Advertisement

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில்,  இயக்குநர் அமீர் உள்ளிட்ட திரைத்துறையினரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு,  அது குறித்த தகவல்களை கூற இயலாது என்று என்.சி.பி துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து,  ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து,  ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகும்படி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்,  அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  ஜெய்ப்பூர் அருகே ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்தனர்.இந்நிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, ஜெய்பூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக தெரிவித்தார்.  ‘மங்கை’ என்ற திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதையும் படியுங்கள் : போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது!

மேலும்,  இந்த போதைப்பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.  மும்பையில் போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் மீது ஏற்கெனவே சில புகார்கள் வந்ததாக கூறிய ஞானேஷ்வர் சிங்,  போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை,  ரியல் எஸ்டேட்,  திரைப்படங்களில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பாலிவுட் திரைத்துறையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஞானேஷ்வர் சிங் தெரிவித்தார்.அமீர் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஜாபர் சாதிக்கிற்கு நட்பு உள்ளதால் அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஞானேஷ்வர் சிங்,  திரைத்துறையினரை விசாரணைக்கு அழைப்பது தொடர்பான தகவல்களை தற்போது வெளியில் கூற இயலாது என்று தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் தலைமறைவான தினமே இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும்,  ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.  மேலும், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement