விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? இபிஎஸ் பரபரப்பு பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கரூரில் உயிரிழந்த தவெக தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கலாய் சந்தித்து பேசியவர், "அரசின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கேள்விக்கு, "இந்த அரசும், காவல்துறையும் இதில் முழு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மெரினாவில் ஏர் ஷோ நடந்தது அதில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் சுமார் 5 பேர் இறந்தார்கள் அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட்டம் நடத்தும்போது, அவர் ஏற்கெனவே 4 மாவட்டங்களில் கூட்டம் நடத்தியபோது, என்ன பிரச்சினை நடந்தது என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.
நாங்களும் பொன்விழா கண்ட கட்சி பல ஆண்டுகள் ஆண்ட கட்சி. வேண்டுமென்றே திட்டமிட்டு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதி என்று செயல்படக் கூடாது. முதல்வர் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டால் கூட்டமே இல்லாமல் இருந்தால்கூட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அதே பாதுகாப்பை மக்களுக்கும் வழங்குவது அரசின் கடமை. அந்த கடமையில் இருந்து அவர்கள் தவறி இருக்கிறார்கள். அதனால் தான் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு நபர் ஆணையம் அமைத்திருக்கிறார்கள். இவ்வளவு துரிதமாக இந்த கமிஷனை அமைத்திருக்கிறார்கள். அதன் நோக்கம் எனக்கு தெரியவில்லை. நான் நேற்று சென்னைக்குப் போயிருந்தேன் இரவு 2 மணிக்குதான் விட்டுக்கு போனேன் காலையில் இங்கு வந்திருக்கிறேன். தொலைக்காட்சியில் பார்த்த செய்திகளை வைத்துதான் நான் பேசுகிறேன். நான் வரும்போது கிடைத்த தகவல்படி, விஜய் அந்த கூட்டத்தில் பேசும்போதே இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. அப்போது அவர் ஒரு கொடி பெயரை சொல்லி அந்த கொடி கட்டிக்கொண்டு இவ்வளவு ஆம்புலன்ஸ் ஏன் வருகிறது என்று கேட்கிறார். இதெல்லாம் மிகப்பெரிய சந்தேகத்தை கொடுக்கிறது.
மக்கள் மயங்கி விழுந்ததால் ஆம்புலன்ஸ் வந்ததாக சொல்கிறார்கள். அங்கு மக்கள் மயங்கி விழுந்தது எப்படி ஆம்புலன்ஸ்காரர்களுக்கு தெரியும்.? மேலே இருந்து பார்த்தால் தான் தெரியும். நானும் 163 தொகுதிகளுக்குப் போய் வந்திருக்கிறேன். முன்கூட்டியே பல ஆம்புலன்ஸ்கள் வந்தபோது, அவர் எதற்காக இவ்வளவு ஆம்புலன்ஸ் என்று கேட்டுள்ளார். இதையெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். 4 மாவட்டத்தில் இதே கட்சியின் தலைவர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு எத்தனை கூட்டம் வந்தது என்று அரசுக்குத் தெரியாதா?
இந்த சம்பவத்துக்காக விஜய் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்கிறீர்கள். இதெல்லாம் கற்பனை கேள்வியாகப் பார்க்கிறேன். அதைப்பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது.
விஜய் வந்து மக்களை பார்க்கவில்லையே என்று கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்று தெரியாது. எங்களைப் பொருத்தவரை மனித உயிர் முக்கியம். நடந்திருப்பது மிகவும் சோகமான நிகழ்வு. இனி எதிர்காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படக் கூடாது. இதுவரை இந்தியாவில் ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் இத்தனை பேர் இறந்ததில்லை. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
விஜய்க்கு போதிய அனுபவம் இல்லாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா என்று கேட்கிறீர்கள். தமிழகத்தில் மற்ற கட்சிகள் அனுபவமுள்ள கட்சிகள், அவற்றில் கட்டமைப்பு இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. நாங்கள் நடத்தும் மாநாடு, கூட்டங்களில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் மற்ற கட்சிகளும் கூட்டங்களை நடத்தியுள்ளன. அங்குள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், அந்தந்த ஊர் நிர்வாகிகளுக்கு, பொறுப்பாளர்களுக்கு கூட்டங்களை நடத்திய அனுபவம் உண்டு. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் அனுபவம் அந்தக் கட்சிகளுக்கு உண்டு. முதல்வர் இங்கு வந்து மக்களை பார்த்ததும், நிவாரண நிதி கொடுத்ததும் ஒரு அரசின் கடமையாகத்தான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படும்போது இதுபோல் செயல்பட வேண்டியது அரசின் கடமை. எல்லா அரசும் அப்படித்தான் செயல்படும். அதைத்தான் இப்போது ஸ்டாலினும் செய்திருக்கிறார்.
இதே போல் கள்ளக்குறிச்சியில் நடந்தபோது முதல்வர் செல்லவில்லையே என்று கேட்கிறீர்கள். அது வேறு, இது வேறு. இது அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து. அது தனிப்பட்ட முறையில் நடந்தது. அங்கும் அரசாங்கம் செய்த தவறால் தான் 68 பேர் உயிரிழந்தார்கள். அவர்கள் இறப்பதற்கு முந்தைய நாள் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் அங்கு விஷ சாராயத்தை குடித்து சிலர் மருத்துவமனையில் இறக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர், காவ்ல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்து பேட்டி கொடுத்தார்கள். அப்போது உண்மைச் செய்தி வெளியிட்டிருந்தால் அந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் உண்மையை மறைத்து செய்தி வெளியிட்டதால் 68 பேர் உயிர் இழந்தார்கள். விஷ சாராயம் குடித்துத்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற செய்தியை முன்பே சொல்லியிருந்தால் நிறைய உயிரிழப்பை தடுத்திருக்கலாம். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாக மாவட்ட ஆட்சியர் சொல்கிறார். உண்மையை அவர்கள் சொல்லியிருந்தால் அடுத்த நாள் துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள் இந்த விஷ சாராயத்தை குடித்திருக்க மாட்டார்கள். இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முழுக்க முழுக்க அரசுதான் காரணம். அதனால்தான் முதல்வர் அங்கு சென்று மக்களை சந்திக்கவில்லை.
ஒரு கட்சியின் கூட்டத்துக்கு முழு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது அரசின் கடமை. அதை இந்த அரசு தவிர்த்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் கொடுப்பது பற்றி கட்சிப் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம். விஜய்க்கு என்னுடைய ஆலோசனை என்னவென்று கேட்கிறீர்கள்.
ஒரு கட்சித் தலைவர் இன்னொரு கட்சித் தலைவருக்கு அறிவுரை கூறுவது ஏற்புடையதாக இருக்காது. ஒரு நபர் ஆணையம் விஜய்க்கு எதிராக விசாரணை நடத்துமா என்று கேட்கிறீர்கள். நீங்கள் கேட்பதற்கு பதில் சொல்ல முடியாது. கமிஷன் அறிக்கை வெளியான பிறகே கருத்து சொல்ல முடியும். தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.