For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? - உயர் நீதிமன்றம் கேள்வி!

10:01 PM Jun 27, 2024 IST | Web Editor
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அவரது தாயாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை    உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து 2022 ஜூலை 17ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான்
காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு
புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “கலவரம் தொடர்பாக 519 பேர் கைது செய்யப்பட்டதாகவும்,
166 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு
அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் கூட்டம் கூட்டிய திராவிட மணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியையும் காவல் துறையினர் இதுவரை விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அவர்களிடம்
விசாரணை நடத்தவில்லை? நல்ல நாளுக்காக காத்து கொண்டிருக்கிறீர்களா? என
நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை, செல்போன் ஆய்வக முடிவுக்காக காத்திருப்பதாகவும், விசாரணை 4 மாதங்களில் முடிக்கப்படும் எனவும்
விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும்
தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags :
Advertisement