சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு ஆவின் பாலை சீராக கொண்டு சேர்ப்பதற்காக சென்னை சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பதனிடும் நிலையங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக பிற மாவட்டங்களில் இருந்து பால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விநியோகித்து வருகிறோம். மேலும் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய தேவையான அளவு பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சிரமங்களை பொருட்படுத்தாமல் மக்களுக்கு விநியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒத்துழைப்புத் தராத விற்பனையாளர்கள் மற்றும் லாரி ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.