மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏன் ?- உச்ச நீதிமன்றம் கேள்வி!
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனு தொடர்பான வழக்கு இன்று 8 வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில் விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசியல் சாசனபிரிவு 200 மற்றும் பிரிவு 201ஆகியவை சட்டமன்ற நடைமுறைக்குள் வருகின்றன. 5 ஆண்டுகளில் நல்லாட்சி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் ஒரு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லதொரு ஆட்சி வழங்க வேண்டும். அந்த வகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதாக இருக்கக் கூடாது. ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் செய்வது அவசியமானது. தமிழ்நாடு வழக்கை பொறுத்தவரையில் 2023ம் ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டு 2025ம் ஆண்டுதான் தீர்ப்பு கிடைத்தது. 2 ஆண்டுகள் நீதிமன்றத்துக்கு அலைந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பை பெற்றோம். அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் வழக்கின் தீர்ப்பிலேயே பதில்கள் உள்ளன. எனவே குடியரசு தலைவர் கேள்விகளை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
தொடர்ந்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் வெறும் கையொப்பம் போடுபவர் என்ற வாதம் ஒருதலைப்பட்சமானது. சில மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படாததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசியலமைப்பை திருத்த வேண்டிய அவசியம் இல்லை. 55 ஆண்டுகளாக நடைமுறையில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்குள் உரையாடல், ஆலோசனை, விவாதங்கள் நடந்துவருகின்றன. மக்கள் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சட்டமன்றம் ஒரு மசோதா நிறைவேற்றினாலும், அது மாநில நலனுக்கு பாதகமாக இருக்கும் சூழலில் முதல்வர் கூட ஆளுநரை தாமதிக்கச் சொல்லிய சம்பவங்கள் உள்ளன. எனவே ஆளுநர் என்பவர் ஒரு கையொப்பமிடம் ஒரு நபராக மட்டும் இருக்க முடியாது அல்லது ஒரு போஸ்ட்மேன் ஒன்றும் இருக்க முடியாது
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி. நரசிம்மா, சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியவுடன் அதன் விளைவுகள் கருதப்பட வேண்டும். மசோதா ஆளுநரிடம் வரும்போது, ஆலோசனை செயல்முறை மதிக்கப்பட வேண்டிய கடமை உண்டா ? ஆளுநர் மத்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக கருதினால், சட்டமன்றம் மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது. மசோதா மறுநிறைவேற்றம் செய்து திரும்பி வந்தபின், அதிக மீண்டும் குடியரசு தலைவரின் முடிவுக்கு அனுப்பும் வாய்ப்பு ஆளுநருக்கு உண்டா ? என்ற கேள்வி எழுகிறது. அதேவேளையில், ஒரு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு இரண்டாவது முறையாக செல்லும்போது அவர் அதனை தடுத்துவைக்க முடியாது, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க 4 ஆண்டுகள் வரை தாமதம் ஏன் ? என்று கேல்வி எழுப்பினார்.
இதற்கு பதிலலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், 1970 முதல் 90% மசோதாக்கள் குறுகிய காலத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், கடந்ந 2014ம் ஆண்டுக்குப் பிறகு பல மாநிலங்களில் 4,5 ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதற்கு முன் ஆளுநர்கள் இப்படி நடந்து கொண்டதில்லை. ஒப்புதல் வழங்காமல் வைத்திருக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஆளுநர்கள் வெளிப்படையாக அறிவித்ததும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் நாளை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.