அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்களா, எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்களஅ என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடந்த முறை உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். இந்நிலையில், மீண்டும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வயநாடு தொகுதியில் வலுவான வேட்பாளாரனா ஆனி ராஜாவை வேட்பாளராக அறிவித்துள்ளது.
ஆயினும் வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தரப்பில் இருந்து ஏதும் அறிவிக்காத நிலையில், பாஜக தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? சிறுபான்மையினர் அங்கு பெரும்பான்மையாக இருப்பதால் தான் அவர் வயநாடு சென்றார். காங்கிரஸ் முழு அரசியலும் சிறுபான்மையினரைச் சார்ந்தே உள்ளது என விமர்சித்துள்ளார்.