சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சமீப காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் பழனிசாமியை சந்திப்பதையும் அவர் தவிர்த்தார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் செங்கோட்டையன் அதிமுக எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்தார். அவர் அதிமுக எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது பேசு பொருளானது.
இந்த நிலையில், சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
" சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்திப்பது சாதாரணம். தொகுதி சார்ந்த கோரிக்கைக்காக சபாநாயகரை சந்திக்க வேண்டி இருந்தது.இன்று கூட 7 எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்திருக்கிறார்கள். நான் சந்தித்ததும் தொகுதி சார்ந்து தான். என்னுடைய தொகுதி சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாக சபாநாயகர் சந்தித்தேன்"
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தார்.