பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? திருச்சி பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
மக்கள் முக்கியம் என்பதாலேயே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
திருச்சியில் இன்று (06.04.2024)நடைபெற்ற தேர்தர் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாயத் தோற்றத்தில் உள்ளன. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை, பிரதமர் வேட்பாளரை தெரிவிக்கவில்லை. வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து, கம்யூ. கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடுகிறார்.
14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் முக்கியம் என்பதாலேயே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம். மரத்திற்கு மரம் தாவுவது போல் பாஜக, காங்கிரஸ் என்று கூட்டணி அமைத்து மத்தியில் பதவி வகித்தது திமுக. தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின் இந்தியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார். அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலன்பெற கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தி, மாநிலத்தை சீரழித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.