Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்?" - இபிஎஸ் கேள்வி!

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
04:55 PM May 21, 2025 IST | Web Editor
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
Advertisement

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"திமுக-வின் அவல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!' பெண்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ் நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்' பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது; உடல் உருவ அமைப்பை கேலி செய்வது; அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது; பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.

ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் 'விசாகா கமிட்டி' பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது, திமுக அரசு இந்தப் பல் மருத்துவக் கல்லூரிக்கு 'விசாகா கமிட்டி' குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறது?.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியரை தெய்வமாக வணங்கும் வழியில், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.  இன்று தமிழ் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது. பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சி நடுங்கும் நிலை இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

"வேலியே பயிரை மேய்வது போல்" இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது என்று எச்சரிக்கிறேன்"

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKDMKedappadi palaniswamiEPSnews7 tamilNews7 Tamil UpdatesTN Govt
Advertisement
Next Article