“அது யாருடைய பணம்?” அம்பானி குடும்ப திருமண செலவு தொடர்பாக மோடியை தாக்கிய #RahulGandhi!
அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு கோடி கணக்கில் செலவு செய்யும் போது, ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே, திருமணத்தை ஏற்பாடு செய்யக்கூடிய கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதன் முடிவுகள் அக்.8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. தற்போது ஹரியானாவில் இறுதிகட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பஹதுர்கர் பகுதியில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“அம்பானி வீட்டு கல்யாணத்தை பார்த்தீங்களா? அம்பானி கல்யாணத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது யாருடைய பணம்? அது உங்கள் பணம்.. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்குகிறீர்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கோடிக்கணக்கில் செலவு செய்யக்கூடிய கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார்.
ஆனால் ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியும். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் இல்லை என்றால், அது என்ன? அக்னிவீர் (திட்டம்) என்றால் என்ன தெரியுமா? நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்திய ராணுவ வீரர்களின் ஓய்வூதியம், கேன்டீன், தியாகி அந்தஸ்து ஆகியவற்றைப் பறிக்கும் வழி அது. இதன் முக்கிய நோக்கம், இந்திய பாதுகாப்பு பட்ஜெட்டை அதானி டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு வழங்குவதே. மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீர் முறையை ரத்து செய்வோம் என காங்கிரஸ் பலமுறை கூறியுள்ளது.
“கேஸ் சிலிண்டரின் விலை ரூ.400 ஆகக் குறைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். ஆனால் இப்போது ரூ.1200. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.500க்கு உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும். உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ. 700 சேமிப்பீர்கள். ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவோம். ஹரியானா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.