தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்? அதிமுகவை முந்தும் தவெக... வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளர். பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து சி வோட்டர் நிறுவனம் இந்தியா டுடே நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 27 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிதாக கட்சி தொடங்கி முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 2026-ல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 18 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு இந்த பட்டியலில் 3வது இடம் கிடைத்துள்ளது. இபிஎஸ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று 10 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 9 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழ்நாடு அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது என 15 சதவீதம் பேரும், ஓரளவு திருப்தியாக உள்ளது என 36 சதவீதம் பேரும், திருப்தி இல்லை என்று 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், 24% பேர் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்திறக் குறித்த கேள்விக்கு, 22% பேர் மிகவும் திருப்தி என்றும், 33% பேர் ஓரளவு திருப்தி என்றும், 22% பேர் திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 23% பேர் தங்களால் இதில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தும் இந்த கருத்துக்கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்றும், 27 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்றும், 32 சதவீதம் பேர் திருப்தியில்லை" என்றும், 33 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பாதிப்புகள் குறித்து கேட்டபோது, 15% பேர் பெண்களின் பாதுகாப்பை குறிப்பிட்டுள்ளனர். 12% பேர் விலைவாசி உயர்வையும், 10% பேர் போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், 8% பேர் வேலைவாய்ப்பின்மை பிரச்னையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவரவர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்களில், 16% பேர் மட்டுமே தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடு மிகவும் திருப்தியளிப்பதாகக் கூறியுள்ளனர். அதேநேரத்தில், 32% பேர் ஓரளவிற்கு திருப்தி அடைவதாகவும், 25% பேர் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் தொகுதி எம்எல்ஏக்களின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு 27% பேர் தங்கள் முடிவைத் தெரிவிக்கவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எவ்வாறு அமையப் போகிறது? யார் முதலமைச்சராவார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.