Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?

10:32 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement
யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இவரது பங்கு என்ன? அவர் கடந்து வந்த பாதை என்ன?

ஒடிசா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக விமர்சித்தார்.

Advertisement

 ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்துள்ள, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் இப்படி பேசியதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியே குறிப்பிட்டு பேசும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழரான இந்த வி. கார்த்திகேயன் பாண்டியன் யார்? என்று விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த வி. கார்த்திகேயன் பாண்டியன்?

1974-ல் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கிப் பயின்ற பாண்டியன், மதுரை ஒத்தக்கடை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி. முடித்தார். பின்னர், டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை படித்தார்.

2000-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற பாண்டியன், ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அலுவலராகப் பணியைத் தொடங்கினார். இதே ஆண்டில்தான் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக்கும் பதவியேற்று, இன்னமும் தொடர்கிறார்.

காலஹண்டி மாவட்டத்திலுள்ள தரம்கர்க்கில் முதன்முதலாக துணை ஆட்சியராகப் பொறுப்பேற்ற பாண்டியன், நெல் கொள்முதலை ஒழுங்குபடுத்தினார். 2005-ல் பழங்குடியினர் அதிகம் வாழும் மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2007 முதல் 2011 வரை கஞ்சம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தைப் பெற்றார். கஞ்சம் மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் பேரவைத் தொகுதியான ஹிஞ்சிலி இருக்கிறது. இங்கேயேதான் நவீன் பட்நாயக் எம்.பி.யாக இருந்த அஸ்கா மக்களவைத் தொகுதியும் இருக்கிறது.

ஆட்சியராக பாண்டியன் இருந்தபோதுதான், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தேசிய அளவில் இரு முறை கஞ்சம் மாவட்டம் விருது பெற்றது. கஞ்சத்திலிருந்துதான் வி. கார்த்திகேயன் பாண்டியனின் மேல் நோக்கிய பயணம் தொடங்குகிறது. பாண்டியனுடைய திறமையைப் பெரிதும் மெச்சிய முதல்வர் நவீன் பட்நாயக், 2011-ல் அவரை முதல்வர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டார்.

இந்த இடத்தை எப்படி எட்டினார்?

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக கார்த்திகேயன் பாண்டியன் உருவானது எப்படி என்பது இன்னமும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயம். 2012-ல்தான் அந்த சம்பவம் நடந்தது. என்னதான் முதல்வர் அலுவலகத்தில் பணி என்றாலும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட, பாண்டியன் மிகவும் ஜூனியர்தான்.

பியாரி மோகன் மொகபத்ரா என்பவர் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர். நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது அவரிடம் முதன்மைச் செயலராக இருந்தவர். மொகபத்ராவை அரசியலுக்குக் கொண்டுவந்தார் பிஜு பட்நாயக். 1997-ல் தந்தை பிஜுவின் மறைவுக்குப் பிறகுதான் - பெரும்பாலும் ஒடிசாவுக்கு வெளியிலேயே இருந்து பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாவற்றையும் டேராடூன், தில்லியில் முடித்தவரான நவீன் பட்நாயக் - ஒடிசாவுக்கும் அரசியலுக்கும் வந்தார். அப்போது மகன் நவீன் பட்நாயக்கிற்கு ஒரு வழிகாட்டியைப் போலத் திகழ்ந்தார் மொகபத்ரா.

ஒடிய மொழியில் சரியாக எழுதவோ, படிக்கவோ தெரியாதவராக இருந்ததாகக் கூறப்படும் நவீனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாவகையிலும் உதவியாக இருந்து செயல்பட்டவர் மொகபத்ரா. ஆனால், 2012-ல் முதன்முதலாக முதல்வர் நவீன் பட்நாயக் வெளிநாட்டுக்கு – லண்டனுக்கு சென்றிருந்தபோது, கட்சியின் சில தலைவர்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற மொகபத்ரா முயற்சி மேற்கொண்டார். இதற்குக் காங்கிரஸும் உதவியதாகக் கூறப்படுகிறது.

ஒடிசாவில் அப்போது 144 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளத்துக்கு 104 உறுப்பினர்கள் இருந்தனர். மொகபத்ராவால் சுமார் 30 பேரின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்தது. இந்த நேரத்தில் பாண்டியன்தான் பெரும்பாலான எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் நவீன் பட்நாயக்கிற்காகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து மொகபத்ராவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தடுத்ததாகக் கூறுவார்கள்.

கட்சியிலும் ஆட்சியிலும் கடினமான தருணங்களில் எல்லாம் நவீன் பட்நாயக்கிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுவந்ததன் மூலம் அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகிவிட்டார் பாண்டியன். ஒடிய மொழியினர் அல்லாதவராக, ஐஏஎஸ் அலுவலராக பணியிலிருந்த போதும் நவீனின் முழு விசுவாசியாக ஆனார் பாண்டியன்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை பாண்டியன் பெரிய அளவில் வெளியுலகத்துக்கு வராமல் இருந்தார். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நவீன் பட்நாயக்கின் முகமாகவும், குரலாகவும் பாண்டியன் செயல்பட ஆரம்பித்தார். அதை நவீன் பட்நாயக்கும் முழுமையாக ஆமோதித்தார். அரசு நிர்வாகம் மட்டுமல்லாமல், கட்சியிலும் தனது ஆதிக்கத்தை பாண்டியன் செலுத்திவந்தார்.

ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் திருமணம் செய்திருக்கும் பாண்டியன், ஒடிசா அரசியலிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். நவீன் பட்நாயக் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு வயதும் 77 ஆகிவிட்டது. சாதாரணமாக இப்போது யாராலும் அவரைப் பார்க்க முடிவதில்லை. அவரின் உடல்நிலையிலும் சோர்வு தெரிகிறது என்கிறார்கள். அவற்றை கவனத்தில்கொண்டு, பாண்டியன் களத்தில் விரைவில் இறக்கப்படுவார் என அரசியல் வாட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

அரசியலில் நேரடிய களம் இறங்கிய வி. கார்த்திகேயன் பாண்டியன்

இந்நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப ஓய்வுபெற்றார் பாண்டியன். அவர் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. உடனே அவர் ஒடிசா அரசு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் `5-டி இனிஷியேட்டிவ் அண்ட் நவீன ஒடிசா'வின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி கேபினட் அந்தஸ்துகொண்டது. அதோடு இந்தத் துறை, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படக்கூடியது.

அதோடு, அனைவரும் எதிர்பார்த்த வகையில் அவர் பிஜு ஜனதா தள கட்சியிலும் இணைந்தார். கட்சியில் இணைந்த பிறகு பாண்டியன் அளித்த பேட்டியில், ``ஜெகநாதரின் ஆசியோடும், முதல்வரின் வழிகாட்டுதலோடும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பணிவுடனும் மாநில மக்களுக்காகத் தன்னலமின்றி பாடுபடுவேன்'' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலும் வந்தது. தற்போது தேர்தலும் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 21 மக்களவைத் தொகுதிகளில், மே 13ம் தேதி 4 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 25ம் தேதி 6 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 6 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், இதே தேதிகளில் ஒடிசாவின் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், மே 13ம் தேதி 28 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 25ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 42 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

ஒடிசாவில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ள போதிலும், பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே செல்வாக்கோடு உள்ளன. இந்த மும்முனை போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒடிஷாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக விமர்சித்தார்.

வி. கார்த்திகேயன் பாண்டியன் பதில்

இந்நிலையில், பிரதமரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கும் வி. கார்த்திகேயன் பாண்டியன், "இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு நன்றாகத் தெரியுமென்றால், அவர் சாவிகள் இருக்குமிடத்தைக் கண்டறிய வேண்டும். அவருக்குக் கீழே பல அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். அவருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கும். அவர் ஒடிய மக்களுக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
BJDBJPCongressElection2024ias officerKarthikeyan PandianNarendra modinaveen patnaiknews7 tamilNews7 Tamil UpdatesOdiaodishaParlimentary Election
Advertisement
Next Article