வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது, "ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செய்யவில்லை. குறிப்பாக மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்பட்டு, நான்கரை லட்சம் கோடியை செலவு செய்யப்பட்டு தமிழகத்திற்கு வீண் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. 53 மாத திமுக ஆட்சியில் எல்லா நிலைகளும் தோல்வி அடைந்து வருகிறது. நிதி மேலாண்மையில் 100% தோல்வி அடைந்து விட்டது .
தமிழகத்திற்கு வாங்கிய கடன் எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட முதலமைச்சர் தயாரா என்று எடப்பாடியார் கேள்வி எழுப்புகிறார், ஆனாலும் இதுவரை பதில் இல்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல உள்ளது. தமிழ்நாட்டில் 11 வகை மதுபான தொழிற்சாலைகளும், 8 பீர் தொழிற்சாலைகளும்,1 ஒயின் தொழிற்சாலைகளும் இயங்கி வரும் நிலையில் 250 மதுபான வகைகளை டாஸ்மார்க் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது
இதில் 185 உள்ளூர் மது வகைகள், 43 உள்ளூர் பீர்வகைகள், 32 உள்ளூர் ஓயின் வகைகள், 6 வெளி மாநில மது வகைகள், 8 வெளி மாநில ஒயின் வகைகள, 5 வெளிநாடு பீர் வகைகள். இவைகளை எல்லாம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஆறு மண்டலங்களாகவும், 43 மாவட்ட குடோன்களில் இருப்பு வைத்து தமிழக முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனை ஆகிறது. இதில் பத்து ரூபாய் கூடுகளாக வசூல் செய்து நாள் தோறும் 10 கோடி ரூபாய் வியர்வை சிந்தாமல் குடிகாரன் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள் என்று அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று விசாரணை செய்து வருகிறது.
இன்றைக்கு மது பாட்டில் விற்பனைகள் மிகப்பெரிய முறைகேடு செய்து சட்ட விரோதப் பணபரிமாற்றமும் நடைபெற்று வருகிறது. கடந்த நான்காண்டில் மட்டும் 12 லட்சம் கோடியில் டாஸ்மாக்கில் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக மதுபானங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரம்புக்குள் செல்லாமல் மாநில அரசின் வாட் வரி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. குறிப்பாக C form பயன்படுத்தி 1250 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. இது சம்பந்தமாக ஆவணங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.
The central tax act 1956 சட்டத்தின் படி இரு மாநிலகளில் கொள்முதலில் Tin நம்பரை பயன்படுத்தி கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் வரியை குறைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த வெளி மாநில மது தொழிற்சாலைகள் தமிழகத்தில் கொள்முதல் செய்துள்ளனர். குறிப்பாக இதற்கு 58 சகவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் ஆனால் இதற்கு C form பயன்படுத்தி பயன்படுத்தி 2 சதவீதம் வரி கட்டலாம். அதற்கு Tin நம்பர் இருக்க வேண்டும் ஆனால் இன்றைக்கு முப்பது வெளி மாநில கம்பெனிகளுக்கு அந்த நம்பரே இல்லை. இதனால் 56% ஜிஎஸ்டி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகும் .
இதன் மூலம் இந்த நான்காண்டுகள் 8,000 கோடி அளவில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வரி ஆதாயம் பெற்ற யார் அந்த சார்? என்பதை நாட்டு மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.