பெரம்பலூர் தொகுதியில் களம் காணப் போகும் வேட்பாளர்கள் யார்?
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெரம்பலூர் தொகுதியில் எந்தெந்த கட்சிகள் யாரை வேட்பாளர்களாக களமிறக்க உள்ளனர் என்பதை பற்றி விரிவாகக் காணலாம்.
திமுக தரப்பில் இருந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அருண் நேரு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக-வின் முதன்மை செயலாளர்களுள் ஒருவரும், மூத்த அமைச்சருமான கே.என் நேருவின் மகன் அருண் நேருவுக்கு வாய்ப்பு வழங்க, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தும் அழுத்தம் தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக சார்பில் முசிறி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். சிவபதியை வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக தொண்டராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பலதரப்பட்ட களப்பணிகளை ஆற்றி சட்டமன்ற உறுப்பினராக வளர்ந்தவர் சிவபதி. கள அனுபவம் வாய்ந்த அவரை வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நோக்கில் அவரை கட்சித் தலைமை வேட்பாளராக நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை பாஜக சார்பில், அந்த தொகுதியின் கோட்ட பொறுப்பாளரரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் நிறுவன தலைவருமான சிவசுப்பிரமணியம் போட்டியிட அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பாஜக-வுடன் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணியை உறுதி செய்யுமாயின் அந்த தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.