இந்த வாரம் வெளியான படங்களில் எது பெஸ்ட்... எந்த படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன், ராம் அப்துல்லா ஆண்டனி, மெஸன்ஜர், தடை அதை உடை, தேசிய தலைவர் தேவர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் கதை என்ன? பிளஸ், மைனஸ் என்ன? எதை பார்க்கலாம், எதை தவிர்க்கலாம். இதோ மினி ரிவியூ!
ஆண்பாவம் பொல்லாதது
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஜென்சன் திவாகர், விக்னேஷ்காந்த், ஷீலா நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டைவர்ஸ் கதை’ இது. ஆம், ஐடியில் வொர்க் செய்யும் ஹீரோ ரியோ, கோவை பொண்ணு மாளவிகா மனோஜை திருமணம் செய்கிறார். ஆரம்பத்தில் அமர்களமாக போகும் இவர்கள் வாழ்க்கை, சில மாதங்களில் ஈகோ சண்டைக்கு மாறுகிறது. ஒரு கட்டத்தில் டைவர்சில் சென்று நிற்கிறது. ஏற்கனவே இதே மாதிரி ஈகோ பிரச்னையில் பிரிந்த விக்னேஷ்காந்த் ஹீரோவுக்காகவும், அவர் முன்னாள் மனைவி ஷீலா ஹீரோயினுக்காகவும் வாதாடுகிறார்கள்.
அப்புறமென்ன விவாதங்கள் களை கட்ட, டைவர்ஸ் கிடைத்ததா? இல்லையா என்பது கதை. கணவன் மனைவி சண்டை, கோர்ட் டிராமா இரண்டையும் வைத்துக்கொண்டு காமெடி கலந்து கலகலப்பாக திரைக்கதையை கொடுத்ததால் படம் முழுக்க ஏகப்பட்ட சிரிப்பு. அதனால், சீரியஸ் கதையாக நகராமல் ஜாலியாக, நாம் கைதட்டி ரசிக்கும் படமாக மாறியிருப்பது படத்தின் சிறப்பு.
மனைவியால் பாதிக்கப்பட்ட கணவனாக தத்ரூபமாக நடித்து இருக்கிறார் ரியோ. திருமணத்துக்கு முன்பு ஒரு மாதிரி, திருமணம் ஆன புதிதில் இன்னொரு மாதிரி, ஈகோ வெடிக்கும்போது வேறு மாதிரி, கோர்ட் விவாதத்தில் புது மாதிரி என மாறுபட்ட நடிப்பை வழங்கி, பல ஆண்களின் மனசாட்சியாக கலக்கியிருக்கிறார்.

என் இனமடா நீ என பல ஆண்கள் அவரை கொண்டாடுவார்கள். பகுத்தறிவு கருத்துகள் பேசிக்கொண்டு, நீ வீட்டு வேலை செய்ய மாட்டீயா? என பொங்கும் கேரக்டரில், ரிலீஸ் மோகத்தில் தவிக்கிற கேரக்டரில், கடைசியில் நானும் ஒரு பெண் என மாறுகிற கேரக்டரி்ல் மாளவிகாவும் மிரட்டியிருக்கிறார். பிரிந்த தம்பதிகளாக, வக்கீல்களாக வரும் விக்னேஷ்காந்த், ஷீலா போட்டி சீன்கள் படத்துக்கு பிளஸ். விக்னேஷ்காந்த் உதவியாளராக வரும் ஜென்சன் திவாகர் அடிக்கும் காமெடிக்கு தியேட்டரே விழுந்து, விழுந்து சிரிக்கிறது. இப்படி சிரித்து எவ்வளவு நாளாச்சு. சித்துகுமார் பாடல்கள், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்தை இன்னும் அழகாக்குகிறது. குறிப்பாக, வசனங்கள் ஒவ்வொன்றும் நச்.
இன்றைய இளம் தம்பதிகளின் பிரச்னைகள், அவர்களின் உளவியில் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள், சண்டைகள், அதற்கான தீர்வுகள் என பல நுட்பமான விஷயங்களை, காமெடி கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். அவருக்கு சிவகுமார் முருகேசனின் ஸ்கிரிப்ட் பலம். ஆண்களின் பாவங்களை சொன்னாலும், பெண்களின் பலங்களையும், அவர்களின் உணர்வுகளையும் சொல்லியிருப்பதால் ஆண், பெண் இரண்டு தரப்பும், சிரித்து, ரசித்து பார்க்கலாம்
ஆர்யன்
ஒரு டிவி ஷோவில் பார்வையாளராக இருக்கும் எழுத்தாளர் செல்வராகவன் ‘சிலரை கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, சில விஷயங்களை பேசிவிட்டு, அங்கேயே துப்பாக்கியால் சுட்டு சூசைட் செய்கிறார். அவர் சொன்னபடியே, சில கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொரு கொலைக்கும் முன்பும்
வீடியோவில் பேசி கொலைக்கான சில விஷயங்களை சொல்கிறார் செல்வராகவன். இறந்தவர் எப்படி கொலை செய்ய வருவார். அவர் சொன்னபடியே எப்படி கொலைகள் நடக்கிறது என்பதை துப்பறிகிறார் போலீஸ் அதிகாரியான ஹீரோ விஷ்ணுவிஷால். அவரால் மீதமுள்ள கொலையை தடுக்க முடிந்ததா? உண்மையில் செல்வராகவன்தான் கொலை செய்தாரா? அதற்கான காரணம் என்ன? ஹீரோ என்ன உணர்ந்தார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் ஆர்யன். புதியவரான பிரவீன்.கே இயக்கியிருக்கிறார்.

எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளது. எத்தனையோ சைக்கோ கதைகள் வந்து இருக்கிறது. இறந்தவர் செய்யும் கொலைகள் என்ற புது கோணத்தில் வருகிறது ஆர்யன். இந்த வகை ஸ்கிரிப்ட், ஒவ்வொரு கொலை நடக்கும் முன்பும், அதற்கு பின்புமான சீன்கள் பரபரப்பு. குறிப்பாக, செல்வராகவன் கேரக்டர், அவர் பின்னணி, அவர் சொல்லும் காரணங்கள் பிரஷ். ஹீரோவாக போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் விஷ்ணு விஷால். டிவி ஷோ காம்பையர் ஆக வரும் ஷ்ரத்தாஸ்ரீநாத், விஷ்ணுவிஷால் மனைவியாக வரும் மானசா ஆகியோரும் நல்ல தேர்வு. ஜிப்ரன் இசை, ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு கதைக்கு வலு.
கொலை விசாரணை காட்சிகள் படத்தின் பிளஸ். இவரா? அவரா என்று தோன்றும் சந்தேகம், தொடர்பில்லா கொலைகள் படத்தை இன்னும் விறுவிறுப்பாக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் தடதட. கொலைக்கான காரணம், அதற்கு இயக்குனர் சொல்லும் விளக்கம், அந்த லாஜிக் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதெப்படி இப்படி நடக்கும், இப்படி என கேள்விகள் வரலாம். ஆனாலும், திரில்லர் கதைகளில் ஆர்யன் வித்தியாசமானது. கொலைக்கதைகளை, திரில்லர் களத்தை விரும்புவர்களுக்கு ஆர்யன் புது அனுபவம்.
ராம் அப்துல்லா ஆண்டனி
3 பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, இன்னொரு பள்ளி மாணவனை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த வழக்கை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீனா. பல கட்ட விசாரணைக்குபின் அவர் மாணவர்களை கைது செய்கிறார். அந்த கொலைக்கு காரணம் என்ன? கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தார்களா என்பதுதான் ஜெயவேல் இயக்கத்தில் பூவையார், அஜய், அர்ஜூன், சவுந்திரராஜா நடித்த இந்த படத்தின் கதை.
3 மதத்தை சார்ந்த, 3 நண்பர்களின் பின்னணி, அவர்களின் தனித்துவம், அவர்களின் குடும்பம், அவர்கள் செய்யும் கொலை, போலீசுக்கு பயந்து நடுங்குவது என முதற்பாதி நகர்கிறது. இவர்களுக்கு நல்ல போலீசாக வரும் சவுந்திரராஜா உதவுகிறார். மாணவர்கள் போலீஸ் பிடியில் சிக்கியவுடன் கதை வேறு திசைக்கு மாறுகிறது. ஏன் கொலை செய்கிறார்கள். அதற்கான சமூக பிரச்னை என்ன? கடைசியில் அவர்கள் நோக்கம் நிறைவேறியதா என்பது மறுபாதி. டான்ஸ், அம்மா பாசம், நட்பு என சிறப்பாக நடித்து இருக்கிறார் பூவையார். அவர் நண்பராக வரும் அஜய், அர்ஜூன் நடிப்பும் அமர்களம். பெற்றோர்களாக வரும் ரவி, ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய் நடிப்பும், கொலையான சிறுவன் தாத்தாவாக, வில்லனாக வரும் வேல.ராமமூர்த்தி நடிப்பும் ஓகே. சவுந்திரராஜா கேரக்டர், அவர் நடிப்பும் படத்தும் படத்துக்கு பலம். டி.ஆர். கிருஷ்ண சேத்தன் பின்னணி இசை, பாடல்கள் அருமை.

குறிப்பாக, பூவையார் அம்மாவாக வரும் ஹரிதா உருக்கமான நடிப்பு, அவரால் ஏற்படும் பாதிப்பு படத்துக்கு பெரிய பிளஸ். புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகளை, அதனால் பாதிக்கப்படுபவர்களின் கோபத்தை அழுத்தமாக, புது பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். பீடி, சிகரெட்டால் ஆண்களுக்கு மட்டுமல்ல, அதை தயாரிக்கும் பெண்களுக்கும் பாதிப்பு, அவர்கள் குடும்பம் சீரழிகிறது என்ற கருத்து வரவேற்கப்பட வேண்டியது. சில குறைகள் இருந்தாலும் கொஞ்சம் பொறுமையுடன் ரசிக்கலாம்
மெஸன்ஜர்
ஒரு விபத்தில் இறந்த ஹீரோயின் பாத்திமா, ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக்கை பேஸ்புக் மெஸன்ஜர் மூலமாக தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர் காதலின் ஆழத்தை அறிந்த ஹீரோ, அவரையே திருமணம் செய்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. என்னது, பேய்யுடன் காதலா? அவருடன் திருமணமா? கடைசியில் குழந்தையா என்று யோசிக்கிறீர்களா? இதுதான் இந்த படத்தில் கதை. பேண்டசி கலந்த பேய் கதையாக, புது கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் லங்காமணி. பேஸ்புக் மெஸன்ஜர் மூலமாக காதலனை தொடர்பு கொண்டு பேசுவதில் இருந்து படம் தொடங்குகிறது. பேய் பின்னணி குறித்து அவர் ஊருக்கு சென்று அறிந்து அதிர்கிறார் ஹீரோ.

கடைசியில் பேயை திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார். அவர்கள் வாழ்க்கை அந்த மெஸன்ஜரில் ஓடுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்ற வித்தியாசமான நாட் ஓகே. ஹீரோ ஸ்ரீராம், பேய் ஆக வரும் பாத்திமா, ஸ்ரீராம் முன்னாள் காதலி மனிஜா நடிப்பு ஓகே. ஆனால், மாறுபட்ட கதையாக இருந்தாலும் கொஞ்சம் மெதுவாக, பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல் நகர்வது மைனஸ். பேய் கதை மாதிரியும் இல்லாமல், காதல் கதையாகவும் இல்லாமல், சுமாரான கதையாக, இந்த வித்தியாச கதை வந்துள்ளது. இயக்குனரின் புதுசாக யோசித்த கருவை பாராட்டலாம்.
தடை அதை உடை
அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் பாரிவள்ளல், குணாபாபு உள்ளிட்டோர் நடித்த படம். ஒரு படத்தில் இரண்டு கதைகள், ஆனால், அதே நடிகர்கள் என்ற மாறுபட்ட கோணத்தில் கதை செல்கிறது. முதற்பாகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தன் மகனை கொத்தடிமை ஆக்கமாட்டேன் என்று சபதம் எடுத்து, அவனை எப்படி படிக்க வைக்கிறார் பாரி என்பதையும், அதற்கான எதிர்ப்பை சொல்லியிருக்கிறார். அதில் காதல், மோதல், ஏற்றத்தாழ்வு பிரச்னைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. அடுத்த பாகத்தில் யூடியூப் ஆரம்பித்து நண்பர்கள் படும் கஷ்டம், பிரச்னைகளை சொல்லியிருக்கிறார். அதில் அரசியல், சினிமா, வில்லத்தனம வருகிறது. இரண்டிலும் ஒரே நடிகர்கள், மாறுபட்ட கேரக்டர், கெட்அப்பில் வருவது புதுமை. ஆனால், திரைக்கதை, கதை சொல்லப்பட்ட விதம் இன்னும் அழுத்தமாக இருந்து இ ருக்க வேண்டும். புதுமுகங்கள் பலர் நடித்து, புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட சோதனை படைப்பு இது.
தேசியதலைவர் தேவர்
ஊமைவிழிகள் படத்தை இயக்கிய ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் உருவான தேவரின் வாழ்க்கை வரலாறு இது. பஷீர் தேவராக நடிக்க, இளையராஜா இசையமைத்து இருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் தேவர் பங்கு, தென் மாவட்டத்தில் அவர் செய்த சேவைகள், அரசியல் பிரச்னைகள், அவர் சந்தித்த வழக்கு, அதன் தீர்ப்பு போன்றவை விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, தேவர், சுபாஷ் சந்திர போஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள், புது தகவல்கள் சிலிர்ப்பு.

மீனாட்சி அம்மன் கோயில் ஆலைய நுழைவு போராட்டம், முதுகுளத்துார் கலவரம், தேவரின் செயல்பாடுகள் என தேவரின் வாழ்க்கையில் சொல்லப்படாத பல விஷயங்கள், அந்த கால அரசியல் நிலவரம், வழக்கு நடந்த விதம், அதில் சொல்லப்பட்ட சாட்சிகள் விவரம் போன்றவற்றை விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கடைசியில் தேவரின் இறுதி நாட்கள், அவர் மரணம், இறுதி சடங்கு காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன. தேவர் கெட்அப்பில் பஷீர் நடிப்பு சிறப்பு. இளையராஜா இசை, அகிலன் ஒளிப்பதிவு அந்த காலத்துக்கே நம்மை அழைத்து செல்கிறது.
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்