“காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதார மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்!” - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் தவறான பொருளாதார மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், தேச நலன் கருதி அவ்வாறு செய்யவில்லை.
பிரதமர் மோடி அப்படி செய்திருந்தால், பிற நாட்டினருக்கு நம் நாட்டின் மீதான நம்பிக்கை போயிருக்கும், முதலீட்டாளர்கள் வந்திருக்க மாட்டார்கள், நமது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பார்கள். நிறுவனங்கள், அரசு, தலைவர்கள் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனதில் தொலைந்து போயிருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியின் தவறான மேலாண்மை காரணமாக வங்கிகள், தொலைத்தொடர்பு, கனிமத் துறைகள் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் பாதித்தது.
கடந்த எட்டு ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பு 596 பில்லியன் டாலர்களாக கணிசமான வளர்ச்சியடைந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் ஊழல் நிறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமான ஆட்சிக்கு பின் தற்போது உண்மையை வெளிகொண்டுவரும் நிலை உருவாகியுள்ளது. இது மீண்டும் நாட்டில் பழைய குழப்ப நிலை உருவாகாமல் தடுக்க உதவும்.